Monday, October 23, 2017

பாம்பாட்டி சித்தர் பாடல்கள் - 01


தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே! சிவன்
சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே!
ஆடுபாம்பே! தெளிந்து ஆடுபாம்பே! சிவன்
அடியிணை கண்டோமென்று ஆடுபாம்பே!

நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம் என்றே
நித்தியமென் றேபெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதும் ஆதிபாதம் நினைந்தே
பன்னிப்பன்னிப் பரவி நின்றாடு பாம்பே!

பொன்னில் ஒளிபோலவெங்கும் பூரணமதாய்ப்
பூவின்மணம் போலத் தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பலவுயிர்களில் மன்னிப் பொருந்தும்
வள்ளலடி வணங்கி நின்று ஆடுபாம்பே!

எள்ளில் எண்ணைபோல உயிரெங்கும் நிறைந்த
ஈசன்பத வாசமலர் எண்ணி யெண்ணியே
உள்ளபடி அன்புபக்தி ஓங்கி நிற்கவே
ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே!

அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை
அகலாம லேநினந்தே அன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி ஆடு பாம்பே!

சோதி மயமான பரிசுத்த வத்துவை
தொழுதழு தலற்றித் தொந்தோம் தோமெனவே
நீதிதவறா வழியில் நின்று நிலையாய்
நினைந்து நினைந்துருகி ஆடு பாம்பே!

அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமுமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே!

சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச்
சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே
எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை
எடுத்து விரித்துநின் றாடு பாம்பே

எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே

No comments

Post a Comment

© மகான் பாம்பாட்டி சித்தர்
Maira Gall